search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கடத்தல்"

    • அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்தாஸ் (28). இவரது மனைவி அனிதா (23). இருவரும் நேற்று முன்தினம் காரில் சென்னையில் உள்ள அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர்.

    நேற்று காலை இருவரும் காரில் ஸ்ரீதேவிக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே வந்த போது பின்னால் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உமேஷ்யாதவ் காரில் இருந்து கீழே இறங்கியபோது மர்ம நபர்கள் அவரது மனைவி அனிதாவை கீழே இறக்கிவிட்டு உமேசை காருடன் கடத்திச் சென்றனர்.

    இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் உமேஷ் சகோதரர் ராஜேஷ் என்பவர் நிதி நிறுவனங்களில் கூடுதல் பணம் பெற்றுத் தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பணத்தை ராஜேஷிடம் கொடுத்தவர்கள் உமேஷ் தான் ராஜேஷ் என்று நினைத்து அவரை கடத்தி சென்றதாக தெரிய வருகிறது. இதையடுத்து வெள்ளவேடு தனிப்படை போலீசார் வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை காருடன் கடத்தி சென்ற காஞ்சிபுரம் மாவட்டம் உழக்கோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவளரசன் (36), ராணிப்பேட்டை மாவட்டம் கல்குளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (34) காஞ்சிபுரம் தாமல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), திருவண்ணா மலை மாவட்டம் நெசல்புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி (34) ஆகிய 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.
    • அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ் (27), இவரது மனைவி அனிதா (23) இவர் நேற்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் சென்று இருந்தார்.

    இன்று காலை பெசன்ட் நகரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, புதுச்சத்திரம் அருகே வரும்போது பின்னால் தொடர்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் தன் மீது மோதி விட்டதாக கூறி வழிமறித்தனர்.

    காரில் இருந்த அனிதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு உமேஷ் குமாரை காரில் கடத்திச் சென்றனர்.

    இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அவினாசி:

    திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). இவர் சிங்கப்பூரில் 15 ஆண்டாக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது மனைவி கஸ்தூரி, மகள் யாஷிகா ஆகியோருடன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

    இதையடுத்து குணசேகரனின் குடும்பத்தினரை, அவரின் தந்தை சண்முகம், தாய் கலையரசி மற்றும் உறவினர்கள் ஒரு காரில், திருச்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியில் குணசேகரன் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த போது 2 காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தனர்.

    பின்னர் வலுகட்டாயமாக குணசேகரனை மட்டும் தங்களது காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். அதிர்ச்சியடைந்த குணசேகரனின் தந்தை சண்முகம், அவிநாசி போலீசில் புகார் அளித்தார்.

    உடனே, போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினர்.சோதனைச்சாவடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் விஜயமங்கலம் டோல்கேட்டில் வந்த 2 காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த திருச்சி நாயக்கர் வீதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(28), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த உசேன் முகமது மகன் சாஜித் அஹமது (32),காரைக்குடியை சேர்ந்த சலீம் அகமது மகன் முகமது நஜ்முதீன்( 34) ஆகிய 3பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை அவிநாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடமிருந்து குணசேகரனையும் மீட்டனர்.

    பின்னர் கைதான 3பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது குணசேகரனை கடத்தியதற்கான காரணம் தெரியவந்தது.

    குணசேகரனுக்கு சிங்கப்பூரில் பழக்கமான நண்பர் காரூன் என்பவர் நசீர் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது நசீர், குணசேகரனிடம் நீங்கள் குடும்பத்துடன் ஊருக்கு செல்ல, விமான டிக்கெட் செலவையும், கையில் ஒரு லட்சம் ரூபாயும் தருவதாக கூறியுள்ளார்.அதற்கு பதிலாக தான் கொடுக்கும் 500 கிராம் எடையுள்ள தங்கத்தை கோவையில் உள்ள தனது நண்பர்களிடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.சம்மதம் தெரிவித்த குணசேகரன் தங்கத்தை வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார்.

    திடீரென அங்கு வந்த நசீர் தான் கொடுத்த தங்கத்தை ஒரு சில காரணங்களுக்காக இப்போது வேண்டாம் எனக்கூறி வாங்கி சென்றார். செலவுக்கு கொடுத்த பணத்தை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். பின்னர், பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    அதன்பின் குணசேகரன் குடும்பத்தினருடன் கோவை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இதற்கிடையில் குணசேகரனின் போட்டோவை ஏற்கனவே இங்குள்ள ஆட்களுக்கு நசீர் அனுப்பியதால் தங்கத்தை கொண்டு வந்து கொடுக்காமல் ஏமாற்றி செல்வதாக நினைத்த கும்பல் குணசேகரனை கடத்தியுள்ளனர்.இதில் தொடர்புடைய நசீரின் கூட்டாளிகள் கார்த்திக், முகமது நஜ்முதீன், சாஜித் அகமது ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3பேரையும் தேடி வருகின்றனர். தங்கம் கடத்த உதவியவரை 3பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செய்யது அப்துல் காதரும், காதர் பீர்கானும் ஓட்டலில் இருந்துள்ளனர்.
    • செய்யது அப்துல் காதர் தனது தம்பியை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தை சேர்ந்த யோக்கோப் அலியின் மகன் செய்யது அப்துல்காதர் (வயது 44). இவரது தம்பி காதர் பீர்கான் (29). இவர்கள் காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கும், சென்னை வேளச்சேரியை சேர்ந்த காதர் முகைதீன் என்பவருக்கும் இடையில் சீட்டு பணம் கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்யது அப்துல் காதரும், காதர் பீர்கானும் ஓட்டலில் இருந்துள்ளனர்.

    அப்போது தனது நண்பர்கள் 3 பேருடன் வேளச்சேரி காதர் முகைதீன் அங்கு காரில் வந்துள்ளார். அவர் நம்மிடையே உள்ள பண பிரச்சனையை பேசி முடித்துக் கொள்வோம் என்று கூறி காதர் பீர்கானை காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் செய்யது அப்துல் காதர் தனது தம்பியை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தியபோது காதர் பீர்கானும், அவரை கடத்தியதாக கூறப்படும் வேளச்சேரி காதர் முகைதீன், ஆதம்பாக்கம் செல்வேந்திரன், முருகேசன், காயல்பட்டினம் அலி அக்பர் ஆகியோர் திருச்செந்தூரில் இருப்பதாக தெரியவந்தது.

    உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் காதர் பீர்கானை மீட்டனர். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் பாஜக பிரமுகர் ஒருவரிடம் அவினாஷ் வீடியோவை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
    • போலீசார் அவினாஷை கடத்த முயன்றதாக அரசியல் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போது தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இளம்பெண்ணிற்கு நிதி உதவிகளையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவினாசுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அவினாசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் அவினாஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து இளம்பெண் பாஜக பிரமுகர் ஒருவரிடம் அவினாஷ் வீடியோவை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.

    அரசியல் பிரமுகர் அவினாசுக்கு போன் செய்து தனியாக சந்தித்து பேச வேண்டும் என வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார்.

    அப்போது இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என அவினாஷை வற்புறுத்தினார்.

    அவினாஷ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த சிலருடன் சேர்ந்து அரசியல் பிரமுகர் அவினாஷை தாக்கினார்.

    மேலும் அவினாஷை தன்னுடைய காரில் கடத்த முயன்றார். இதிலிருந்து தப்பிச் சென்ற அவினாஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் அவினாஷை கடத்த முயன்றதாக அரசியல் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள்.
    • கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷியாம் (வயது 17). பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷியாம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் ஷியாமிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஷியாமை கடத்தி சென்றனர்.

    அன்று இரவு கடத்தல் கும்பல் ஷியாமிடம், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி போனை தருமாறு கூறினார்கள். அவர் உடனடியாக தனது உறவினர் பிரேம் (20) என்பவருக்கு போன் செய்து அழைத்தார். பிரேம் ஷியாமை தேடி அவர் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது அந்த கும்பல் பிரேமையும் கடத்தி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் அவர்கள் இருவரையும் அங்குள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடியே 2 வாலிபர்களின் உறவினரான பிரேம் நசீர் என்பவரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டனர். 2 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் தாங்கள் சொல்லும் மொபைல் நம்பருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் செலுத்துமாறு கூறினார்கள். மேலும் போலீசில் புகார் அளித்தால் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

    இதையடுத்து பிரேம் நசீர், கடத்தல்காரர்கள் சொன்ன மொபைல் நம்பருக்கு ஜிபே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். தன்னிடம் அவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதற்கு கடத்தல்காரர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மேலும் ரூ.4 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். ஆனால் மேலும் பணம் வேண்டும் என்று அவர்கள் கூறியதால் மீண்டும் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். ஆனாலும் கடத்தல் கும்பல் 2 வாலிபர்களையும் விடவில்லை. ரூ.14 ஆயிரம் அனுப்பிய பிறகும் இருவரையும் விடுவிக்காததால் அவர்களது குடும்பத்தினர் ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள். அப்போது கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் அங்கு செல்வதற்கு முன்பே ஊர் பொதுமக்கள் வனப்பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கு கடத்தப்பட்ட 2 வாலிபர்களும் கடத்தல் காரர்கள்கள் 4 பேரும் இருந்தனர். பொது மக்கள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல் கும்பல் கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    பதிலுக்கு பொதுமக்கள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கடத்தல்காரர்கள் நிலை குலைந்தனர். பின்னர் கடத்தப்பட்ட 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மீட்டனர். அதன் பிறகு கடத்தல்காரர்கள் 4 பேரையும் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஒருவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றவர்களுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த நட்ராஜ் (31), அய்யப்பன் (19), படப்பையை சேர்ந்த மணிகண்டன் (19), சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (19) என்று தெரிய வந்தது. இந்த கும்பல் இதே போல் பொதுமக்களை கடத்தி சென்று பணம் பறித்து வருவதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல்காரர்களை ஊர் பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • போலீசார் விரைந்து சென்று கடத்தல் சம்பவம் நடந்த தென்னூர் பகுதியில் விசாரணை மேற் கொண்டனர்.
    • பிடிபட்டுள்ள கதிரேசனும் கடத்தல் தங்கத்தை வாங்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தினமும் லட்சக்கணக்கில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய், தோஹா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 8 விமானங்கள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.

    அதில் வந்த பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக மறைத்து கடத்தி வரும் தங்கங்களை வாங்குவதற்காக நேற்று இரவில் இருந்து வியாபாரிகள் விமான நிலையத்தில் ஆங்காங்கே காத்திருந்தனர்.

    பின்னர் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் சாதிக் பாட்சா என்பவர் ஒரு கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொண்டு தன்னுடைய உறவினர்கள் 4 பேருடன் காரில் புறப்பட்டுள்ளார்.

    அப்போது மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்தது. அதில் ஒரு காரில் 4 பேரும், 2 இருசக்கர வாகனங்களில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் வந்துள்ளனர்.

    சாதிக் பாஷா தரப்பினர் தென்னூர் மூல குலத்தெரு பகுதியில் காரில் இருந்து இறங்கும்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டியது. இதனால் செய்வதறியாது தவித்த சாதிக் பாட்சாவை அந்த கும்பல் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளுடன் கடத்தியது.

    இதைப்பார்த்த சாதிக் பாட்சாவின் உறவினர்கள் கூச்சலிட்டனர். இதற்கிடையே ரம்ஜான் நோன்பு திறப்பதற்காக தொழுகை முடித்துவிட்டு பள்ளி வாசல் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் அங்கிருந்து சாதிக்பாட்சாவுடன் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    அதில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் மட்டும் காரில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்தார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    நடந்த சம்பவங்களை திருச்சி அரசு மருத்துவமனையிலும் கூறினர். அதன் பின்னர் தான் கடத்தல் சம்பவம் நடந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து தில்லைநகர் போலீசார் விரைந்து சென்று கடத்தல் சம்பவம் நடந்த தென்னூர் பகுதியில் விசாரணை மேற் கொண்டனர்.

    அதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி அரசு மருத்துவமனை காவல்நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், கதிரேசனை ஒப்படைத்தால், நாங்கள் சாதிக்பாட்சாவை விடுவிப்போம் என்று கடத்தல் கும்பல தெரிவித்தது.

    இதையடுத்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட போலீஸ் குழுவினர் கதிரேசனை கைது செய்து அவரை அழைத்துக் கொண்டு சமயபுரம் பகுதியில் காத்திருந்த கடத்தல் கும்பலிடம் சென்றுள்ளனர்.

    ஆனால் அச்சம் அடைந்த மர்ம நபர்கள் போலீஸ் படையினர் வருவதற்குள் சாதிக்பாட்சாவை அதே பகுதியில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து சமயபுரம் பகுதியில் அவரை மீட்ட போலீசார் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    ஆனால் இதில் சாதிக் பாட்சா எவ்வளவு நகைகள் கொண்டுவந்தார் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பிடிபட்டுள்ள கதிரேசனும் கடத்தல் தங்கத்தை வாங்கும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.

    தங்கத்தை வாங்குவதற்கு நடந்த போட்டியில் சாதிக் பாஷா மொத்த நகைகளையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டதால் ஆத்திரமடைந்த கதிரேசன் தரப்பினர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. 

    • விருதுநகர் அருகே வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பழைய செந்நெல்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது32). முதுகலை பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பஸ்சில் சென்று வந்த போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மாரீஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் தான் அவருக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி மாரீஸ்வரியிடம் இருந்து நகைகளை வாங்கி ரூ.3.50 லட்சத்திற்கு முருகன் அடகு வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் முருகன் நின்று கொண்டிருந்த போது மாரீஸ்வரியின் சகோதரன் மாரீஸ்வரன் அவரது நண்பருடன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இருவரும் சேர்ந்து முருகனை இருசக்கர வாகனத்தில் விஜயகரிசல்குளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரீஸ்வரியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் வந்துள்ளனர். 4 பேரும் சேர்ந்து முருகனை கடுமையாக தாக்கினர்.

    மேலும் மாரீஸ்வரி யுடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும், நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயமடைந்த முருகன் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே பண தகராறில் வாலிபர் கடத்தப்பட்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்நத பாண்டித்துரை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வைரமுத்துவின் மகன் முத்துக்குமார் (19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை, பாண்டித்துரை, மாரி, அலர்ட் ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் தாக்கியதுடன் அவரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கருப்பசாமி, வைரமுத்துவுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கடத்திச்சென்ற பாண்டித்துரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×